Font Help?

Linggo, Setyembre 10, 2006

16. உதிரப்போகும் ரோமம்- வைக்கோ

சில காலமாய் வைகோவின் செவ்விகளை வருத்தத்தோடு மௌனமாக படித்து வருகிறேன். தூளாய்ப்போன நம்பிக்கையினால் இப்போது இவரைப் பார்க்கும் போதெல்லாம் சிதிலமடைந்து கிடக்கும் பழைய கோட்டையை காண்கையில் தோன்றும் சொல்லவியலா அயர்ச்சிதான் வருகிறது.

சில காலம் முன்பு வரை தேய்ந்துவிட்ட திராவிட கொள்கைகள் இவரால் துளிர்க்குமென்ற நம்பிக்கை எனக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அது இந்த தேர்தலுக்கு பிறகு முற்றிலும் நிராசையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் வைக்கோ கூட்டணியிலிருந்து வெளியேறியது மு.க வின் சதியாயிருக்கலாமென்றும், அல்லது கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களால் உந்தப்பட்டு இந்த முடிவை இவரது விருப்பமின்றி எடுத்திருக்கலாமென்றும் அதனால் இவரை கட்சியின் தோழர்களுக்காக கொள்கைகளை சமரசம் செய்து கொண்டவர் என்று பலரைப்போல் நானும் நம்பியிருந்தேன். பெரும்பாலும் எனக்கு வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் மீதிருந்த நம்பிக்கையில் துளியளவு கூட அவரது இயக்கத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களிடம் இல்லை. பெரும்பாலானவர்கள் பதவி வெறிபிடித்த ஓட்டுண்ணி அரசியல் வியாதிகளாகவே தெரிந்தனர். அதுகூட இவ்விதமான எண்ணம் கொள்ள காரணமாயிற்று. அதையெல்லாம் சமாளித்து வெற்றிகரமான மாற்று சக்தியாக அல்லது குறைந்தது ஒரு முக்கிய தீர்மாணிக்கும் நிலைக்கு வருவாரென்று இருந்தேன். ஆனால் அம்மையாருடன் கூட்டணிகொண்ட பின்பு இவரது செவ்விகளும், பேச்சுகளும் சாயத்தை மொத்தமாக வெளுத்து விட்டன. இப்போது அவ்விதம் வந்து விடுவாரோ என்று கவலைப்பட வைத்து விட்டார். நாய் முகமூடி மாட்டினால் குரைத்துத்தான் ஆகவேண்டும். அதைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் அளவுக்கு மீறி வாலைக்குழைத்துக்கொண்டபடி எசமானிக்காக துதிபாடுவது அவரது மதிப்பை வெகுவாக குறைத்து விட்டது. இதில் திருமா எவ்வளவோ தேவலாம்(இதுவரை). திருமா இதில் மிகவும் சமன் செய்து நடப்பதாக தோன்றுகிறது. பொதுவாக கூட்டணி தலைவியை ஆதரித்தாலும் தேவையான சமயங்களில் மட்டும் எதிர்கருத்தை தயக்கமின்றி சொல்லியும் சரியான கோட்டில் செல்வதாக தோன்றுகிறது.

பெரும்பாலும் எனக்கு திராவிட தலைவர்களின் பால் ஈர்ப்புகொள்ள வைத்ததில் திரவிட சமூக நீதிகொள்கைகளும், அவர்களின் தமிழ் மேடைப்பேச்சுக்களும் தான். பெரும்பாலும் கலைஞரின் அறிக்கைகளை பெரும்பாலும் அதன் உள்ளடக்க கருத்து எனக்கு ஒப்பவில்லையென்றாலும் அதில் உள்ள தமிழ் ஆளுமைக்கும், தொனிக்கும் எள்ளலுக்காகவும் படிப்பேன். அதேபோல் தான் வைகோவின் மேடைப்பேச்சும். இதுவரை அவரது பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்றதில்லையாயினும் ஒலிப்பேழைகளின் வழி நிறைய கேட்டிருக்கிறேன். உணர்வுக்கு தேவையான ஏற்ற இறக்கங்களுடன் நல்லமொழிநடையோடு, ஏராளமான புதிய மேற்கோள்களோடு கேட்கும்போது நம்மையும் அந்த சுழலில் அதன் வேகத்தோடு இழுத்துச் செல்லும். அவரது மேற்கோள்கள் பலசமயம் மூலத்தை தேடி ஓடவைக்கும். ஆனால் இன்று அதே மேற்கோள்கள் நகைப்பின் மையப்புள்ளிகளாகி விட்டன. அதேபோல் அதேபோல அவரது துணிவான ஈழநிலைப்பாடும் அவரை திரும்பி பார்க்க வைத்தன. என் பதின்ம வயதுவரை எங்கள் பகுதிகளில் விடுதலைப்புலிகள்தான் பெரும்பாலானோரின் ஆர்தசன நாயகர்கள். அதுதான் முதலில் என்னை இவர் பேச்சுகளின் பால் கவனம் கொள்ள வைத்தது. குறைந்தபட்சம் இதில் இன்னும் சகோதரிக்காக சமரசம் செய்து கொள்ளாதது ஆறுதல் அளிக்கிறது.

என் தந்தையின் கல்லூரிப்பருவத்தில் அவரும் அவர் நண்பர்களும் நாவலரின் பேச்சைக் கேட்ட 10 கல் பயணம் செய்து கேட்டுவருவார்களாம். அதுவும் இறுதியாக "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழங்கு" என்று முடிக்கும் வரை கேட்ப்பார்களாம். அதே நாவலர் உதிர்ந்த ரோமமான போது எப்படியிருந்தவர் இந்த பதவியாசையினால் இப்படியாகிவிட்டாரென்று மிக வருத்தப்பட்டார். அது அவர் தலைமுறை. அடுத்த தலைமுறைக்கு வைக்கோவும் வந்து விட்டார். எப்படியும் சகோதரியை விட்டு விலகும் போது மீண்டும் அதே வாசகம் அல்லது அதேபோன்ற வாசகம் புரட்சிதலைவியிடமிருந்து வருமென்று எதிர்பார்க்கலாம். அப்போது ஒரு கீழான அரசியல்வியாதியாகத்தான் தோண்றப் போகிறார். காரணம் வைக்கோ தன் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இனி அதை திரும்ப கொண்டுவாரென்ற நம்பிக்கையுமில்லை.

எனவே உதிரப்போகும் ரோமத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைச் இப்போதே சொல்வதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

11 Comments:

Blogger நாடோடி said...

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். வைகோ ஒரு சராசரி (அதற்கும் கீழ்த்தரமான) அரசியல்வாதி ஆகி பல நாட்களாகிறது.

அய்யோ பாவம் (அதைத் தவிர வேறென்ன சொல்ல !!)

Lin Set 10, 08:52:00 PM GMT-4  
Blogger அருண்மொழி said...

அண்மைக் காலத்தில் வைகோவின் நடவடிக்கைகளை பார்க்கின்றபோது ஜெயலலிதா அத்வானியை செலக்டிவ் அம்னீஷியா என்றது தான் ஞாபகம் வருகிறது. அவர் செய்த மிகப் பெரிய காமெடி தன்னையும் ஜெயையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்றது.

Lun Set 11, 04:48:00 AM GMT-4  
Blogger செந்தில் குமரன் said...

எதையுமே எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் எனக்குத் தெரிந்த அரசியல் பாடம். இந்திரா காந்தியுடன் கலைஞர் கூட்டு வைக்கவில்லையா? சந்தர்ப்பவாதம் என்பது அரசியலில் அங்கமாகி விட்டதால் வைகோவின் போக்கு எனக்கு ஒன்றும் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

அரசியலில் மட்டும் எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் ஏமாந்து போவீர்கள்.

Lun Set 11, 09:29:00 AM GMT-4  
Blogger nayanan said...

வைகோ அணி மாறியதால் அவர் ஒரு துரோகி
என்றூ சொல்லப்படவில்லை எனினும்,
தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறார் என்று ஒத்துக் கொள்கிறார்கள்
மக்கள்.

தமிழீழத்திலே, கருணா என்ற ஒருவர்
சிங்களத்துடன் போரிட்டார்். பின்னர் தமிழ் உணர்வை மறந்து தமிழர்களின் உணர்வுகளுக்குத் துரோகம் செய்யும் வகையில் யார் தமிழர்களின் உணர்வுகளை
கசக்கிக் காயப்போடுகிறார்களோ அவர்களுடனே,அந்த சிங்களவர்களோடெயே போய் ஒட்டிக் கொண்டார் கருணா.சிங்களமும் அவரைத் தற்போதைக்கு அரவணைக்கிறது.

அதேபோல,தமிழ்நாட்டிலே,
செயலலிதாவுடனும் அ.தி.மு.கவுடனும்
போரிட்டார் வைகோ. பின்னர் தமிழ் உணர்வை மறந்து, தமிழர்களின் உணர்வுகளுக்குத் துரோகம் செய்யும் வகையில் யார் தமிழர்களின் உணர்வுகளை
கசக்கிக் காயப்போடுகிறார்களோ அவர்களுடனே, அந்த செயலலிதா அம்மையாருடனேயே போய் ஒட்டிக் கொண்டார். அம்மையாரும் தற்போது அவரை அரவனணக்கிறார்.

தமிழ் தமிழர் உணர்வு என்று சொல்லப்படும்போது, தமிழ் மக்களுக்கு தமிழகத்தில், யாரின் மேலும் நம்பிக்கை இல்லாமற் போனதற்கு வைகோ பெரும்பங்காற்றியிருக்கிறார்.

எனினும் நீங்கள் சொல்லியிருப்பது போல,
ஒட்டிக் கொண்டதெல்லாம் ஒரு நாள் உதிரத்தான் போகிறது.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Lun Set 11, 10:07:00 AM GMT-4  
Blogger சோழநாடன் said...

நண்பர்களே, வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

நாடோடி,
ஆம். அவர் கூட்டணி வைத்தது கூட பெரியதாக தெரியவில்லை. ஆனால் அவரது தற்போதைய செவ்விகள் தான் அவரை மிகவும் கீழிறக்குகின்றன.

அருண்மொழி,
///
தன்னையும் ஜெயையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்றது.
///
அதனால்தான்
"ஆனால் இன்று அதே மேற்கோள்கள் நகைப்பின் மையப்புள்ளிகளாகி விட்டன. " என்றேன்.

குமரன்(எண்ணம்),
அவரது கூட்டணி ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று என்றாலும், அது ஏமாற்றத்தை தரவில்லை. ஆனால் இந்த அளவிற்கு அம்மையாரின் அடிவருடியாக மாறியதுதான் ஏமாற்றமாக உள்ளது. அதனால்தான் இந்த விஷயத்தில் திருமாவுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறேன்.

நாக.இளங்கோவன்,
சரியாக சொல்லியிருக்கின்றீர்கள். வைக்கோ தம் மீதான நம்பிக்கையை பெருமளவு உடைத்து விட்டார்.

Lun Set 11, 08:24:00 PM GMT-4  
Blogger Chandravathanaa said...

சோழநாடான்
நட்சத்திர வருகைக்கு வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 01:04:00 AM GMT-4  
Blogger SP.VR.சுப்பையா said...

கழுத்தில் மாலைகளோடு
கையில் வாழ்த்துக்களோடு

வாருங்கள் நட்சத்திரப்பதிவாளர் வடுவூராரே!
உங்களின் இவ்வாரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

வைக்கோவைப் பற்றி:
மனித வாழ்க்கையே ஒருநாள் உதிரப்போவதுதான்
ஆனால் பணத்திற்க்காகவும் பதவிக்காகவும் இடையில் தன் நிலையிலிருந்து உதிராமல் இருக்கவேண்டும்

அரசியலில் இது சாத்தியமில்லை - உடன் இருக்கும் கட்சியின் அமைப்பாளர்களூம், தொண்டர்களில் சிலரும் காட்டும் ஆட்டங்களில் உதிரும்படியாகிவிடும்!

Lun Okt 02, 01:26:00 AM GMT-4  
Blogger ஜோ / Joe said...

வைகோ-வின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்

Lun Okt 02, 01:57:00 AM GMT-4  
Blogger சோழநாடன் said...

சந்திரவதனா,
வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 09:03:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

வாத்தியாரையா,
வாழ்த்தை கவிதையாவே படிச்சுட்டீங்களா. வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 09:03:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

ஜோ,
உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். நம் எண்ணங்கள் இணையும் பல புள்ளிகளில் இதுவும் ஒன்று.

Miy Okt 04, 09:05:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home