Font Help?

Biyernes, Hunyo 30, 2006

14. ஒரு தற்கொலையும், துரத்தும் நினைவுகளும்

அன்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சமயம் அந்திசாயும் நேரத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. சிறிது நேரத்தில் ஒன்று சிலவாகவும் பின்னர் பலவாக பலமாகவும் ஆனது. சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு ஓடினேன். அவன் நினைவிழந்து கிடந்தான். சற்றே தூக்கலான மது வாசனையும், கொஞ்சம் போல வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்து வாசனையும் வீசியது.

விழுந்து கிடந்தவன் துவக்கப் பள்ளி முழுவதும் என்னுடனே படித்தவன். தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் பெரும்பாலும் கட்டுப்பாடற்றே வளர்ந்து வந்தான். 30 அடி ஆழ கிணற்றில் குதிப்பதும், தென்னை மரத்திலேறி கிளி, பொன்வண்டு பிடிப்பதுவுமாக சிறுவயதுகளில் சக வயது தெருப்பையன்களின் ஆதர்சனமாகவே இருந்தான். வீட்டிலிருந்து கடிகார முள்ளைக் கட்டிகொண்டு நாங்கள் விளையாட வரும் போது அவன் மட்டும் மணிக்கணக்கில் ஆற்றில் நீச்சலடிப்பான். அதுவும் எனக்கு பம்பரம் கற்று தந்ததிலிருந்து, இரகசியமாய் என்னை ஆற்றுக்கு நீச்சலடிக்க, மீன்பிடிக்க அழைத்து போவது வரை அவனேதான் செய்வான்.

துவக்கப்பள்ளி முடிந்ததும் வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டதால் தொடர்புகள் அருகிவிட்டன. சேர்ந்து ஊர்சுற்றுவது கோடை விடுமுறைகளோடு முடிந்து விட்டது. அதுவும் பத்தாம் வகுப்பு வந்ததிலிருந்து முடிவுக்கு வந்தது. அப்போதெல்லாம் எங்கள் பக்கங்களில் கிரிக்கெட் சிறிய அளவில் இருந்தாலும் பிரசித்தி பெற்ற விளையாட்டுக்கள் கபடியும், கைப்பந்தும் தான். ஊருக்கு ஒரு அணி கைப்பந்திற்கென்று இருந்தால், தெருவுக்கு ஒன்று கபடிக்கென்றிருக்கும். சில சமயம் சண்டையால் பிளவுபட்டு தெருவுக்கு இரண்டு, மூன்று கூட இருக்கும். இவனுக்கு படிப்பில் எந்த முன்னேற்றமில்லாவிட்டாலும் கபடி விளையாட்டில் பெரும் பேர் கிடைக்க ஆரபித்தது. ஆள் ஒல்லியாக இருந்தாலும் வியூகம் வகுப்பதிலும் உடைப்பதிலும் தேர்ந்திருந்ததால் வெகு வேகமாக எல்லோருக்கும் தெரிந்தவனானான். அவனுக்காக தனி வியூகங்களை எதிரணியினர் வகுக்கும் அளவிற்கு ஆனான்.

கபடிக்காக சுற்றியதில் ஒவ்வொரு வகுப்பும் தாண்டுவது அவனுக்கு பெரும்பாடாகவிருந்தது. ஒருவழியாக அவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது நான் கல்லூரியில் நுழைந்திருந்தேன். அந்த பத்தாம் வகுப்பு தேர்வை மூன்று வருடங்கள் திரும்ப திரும்ப எழுதியும் 2 பாடங்கள் தான் முடித்திருந்தான். மாவட்ட மற்றும் மாநிலத்துக்கு விளையாட பத்தாம் வகுப்பு முடித்தே ஆக வேண்டியிருப்பதால் "வேறு" வழிகளில் முடிக்க முயற்சிப்பதாக மற்ற நண்பர்கள் சொன்னார்கள். கூப்பிட்டு "ஏதாவது டியூஷன் போயாவது படியேண்டா" என்றால் சிறு சிரிப்பும் வாத்திகளுக்கு நாலு வசவும் தான் பதிலாக வரும். இந்த கால கட்டங்களில் அவ்வப்போது நாங்கள் கைப்பந்து விளையாடும்போது வந்து கலந்துகொள்வான் ஆனாலும் அவனுக்கு சகவாசம் பெரும்பாலும் "பெருசுகளுடன்" ஆகியிருந்தது.

இப்படியான நேரத்தில் யாரிடமோ பத்தாம் வகுப்புக்காக பாஸ் செய்ய பத்தாயிரம் வரை பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், திருப்பி கேட்கையில் கடைத்தெருவில் சண்டை வலுத்ததாகவும் சண்டையின்போது அடிவாங்கிய எதிராளி அவன் அம்மாவையும், சித்தியையும்(அவன் அப்பாவுக்கு இரு மனைவிகள்) கேவலமாக திட்டியதாகவும் அதனால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்ததாகவும் பின்னர் தெரியவந்தது.

இதற்குள் நிலமை புரிந்து மருத்துவமனைக்கு 2 கி.மீ செல்லவேண்டுமாதலால் பக்கத்து வீட்டிலிருந்த பைக்கை எடுத்து வர ஓடினேன். அவன் அம்மாவும் மற்றும் சிலரும் உப்புத்தண்ணீரும், வேறு ஏதோவும் கொடுத்து வாந்தியெடுக்க வைத்துக்கொண்டிருந்தனர். வேகமாக வண்டியை எடுத்து வந்து நிறுத்தினேன். சிலர் தூக்கி பைக்கில் உட்காரவைக்க அவனுக்கு பின் இன்னொருவர் உட்கார்ந்து பிடித்துக்கொண்டார். என்மேல் சாய்ந்து கிட்டதட்ட தொங்கிக்கொண்டே வந்தான். வேகமாக செல்கையில் பாதிவழியில் சில வினாடிகள் சுயநினைவு வந்தது. சுயநினைவு வந்ததும் என்னை விளித்து "டேய் நான் சாக போறேன். பொழைக்க வைக்க பாக்குறியா" என்று சிரித்தபடி மீண்டும் சுயநினைவிழந்தான். இப்போது அவன் உடல் அசாதாரணமாய் முறுக்கேறி என் முதுகை பிடித்து அழுத்த நான் வண்டியின் மேல் கிட்டதட்ட படுத்து விட்டேன். அந்த நாட்களில் நான் அவனை விட கொஞ்சம் பலமானவன்தான். சாதாரணமாக அப்படி அழுத்தினால் என்னால் தாக்குபிடிக்க முடியும். ஆனால் இப்போதைய பிடி அசுர பலத்தில் இருந்தது. ஆனாலும் விடாமல் தலையை மட்டும் தூக்கிய பாதையை பார்த்த படி ஹாரனை அழுத்திக்கொண்டே வண்டியை விரட்டிக்கொண்டிருந்தேன். பின்னால் பிடித்துக்கொண்டிருந்த அண்ணனோ அவனைப் அடக்கி பிடிக்க போராடிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மெதுவாக உடல் தளர்ந்தது.

ஒருவழியாக பத்து நிமிடங்களில் மருத்துவரிடம் கொண்டு சென்று சேர்த்தோம். நான் குடம் முழுக்க தண்ணிரோடு தலைக்கு மேல் பிடித்துக்கொள்ள மருத்துவர் மெல்லிய நீண்ட குழாயின் ஒரு முனையை வாய் வழியே அவன் வயிறு வரை விட்டார். மறுமுனை குடத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கியது. குழாய் வழியே தண்ணீர் சென்று வயிற்றை சுத்தம் செய்து வாய்வழியே வந்தது. அதன் துர்நாற்றமே தாங்க முடியாமல் இருக்க, சிறிது நேரத்தில் மலமும் சிறுநீரும் வெளியானதும் அருகிலிருந்த நாங்கள் இருவரும் வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்தோம். இன்னும் அரைமணி நேர பெரும் போராட்டத்துக்குப்பிறகு மருத்துவர் கையை விரித்து விட்டு தஞ்சாவூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல சொன்னார். அதற்குள் தெருவிலிருந்த ஏராளமானோர் வந்து விட அங்கிருந்த ஒரு காரில் அவனை ஏற்றினோம். நானும் இன்னொருவரும் தூக்கியபோதே அவன் உடல் லேசாக வெட்டியிழுக்க மொத்தமாக வியர்த்துப்போனேன். அதன்பிறகு அங்கு நிற்கவும், காரில் தஞ்சை செல்லவும் என்னால் முடியாமல் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.

ஆனால் நான் வந்து சில நாழியில் "அதுவும்" திரும்பிவந்தது. கூடவே சுற்றி திரிந்த ஒருவன் என் கைகளில் இறந்ததும், அவன் கடைசியாய் பேசியது என்னுடன் என்ற நினைவு துரத்தவும் திரும்ப போய் "அதை" பார்க்க திராணியில்லாமல் என் அறையில் அப்போது சென்று நுழைந்தவன் அடுத்தநாள் மதியம் "காரியம்" முழுவதும் முடிந்தபின் தான் வெளியே வந்தேன். ஆனால் அன்றைய அதிர்வு பலவருடங்களாய் என்னுள் இருக்கிறது.

17 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

சோழ நாடன், இந்த மாச தேன் கூடு போட்டிக்கு இப்போ தாங்க தலைப்பு அறிவிச்சாங்க.. அதுக்குள்ள!!

பயங்கரமாத்தான் இருக்கு..

Biy Hun 30, 10:12:00 PM GMT-4  
Blogger இளவஞ்சி said...

போட்டிக்கு போட்டுருங்க!

அப்படின்னா, கலந்துக்கற மொத ஆள் நீங்கதான்னு நினைக்கறேன்! :)

Biy Hun 30, 10:16:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

பொன்ஸ்,
இது போட்டிக்காக எழுதல. முன்பே ஒருவர் தொலைக்காட்சி நடிகையின் தற்கொலையைப் பற்றி எழுதியபோது இதையும் எழுத வேண்டுமென்று தோன்றியது. நீண்டவாரயிருதியாச்சேன்னு இன்னைக்கு மதியத்திற்கு பிறகே யாரையும் இங்க காணும். (திங்கள் முக்கல்வாசி தலைங்க விடுப்பு சொல்லிட்டாங்க). கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குதான் freeயா விட்டிருக்காங்க அதான் உட்கார்ந்து எழுதிட்டேன். போட்டிக்கு அனுப்பும்படியிருந்தா சொல்லுங்க அனுப்பிடுவோம்.

இளவஞ்சி,
கலந்துக்கும்படியிருக்கா(உங்க தலைப்புக்கு ஏற்றபடி இருக்கா) சொல்லுங்க, அனுப்புவோம்.

Biy Hun 30, 10:57:00 PM GMT-4  
Blogger நிலா said...

கனமா இருக்குங்க...

Sab Hul 01, 12:07:00 AM GMT-4  
Blogger நாமக்கல் சிபி said...

போட்டிக்கு அனுப்புங்க சோழ நாடன்!

Sab Hul 01, 12:13:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

தேன்கூடு போட்டிக்கு அனுப்புவதால் பின்குறிப்பாக போட்டதை மட்டும் வெட்டி இங்கே ஒட்டியிருக்கின்றேன்.

[எழுதி முடித்து திரும்ப படித்துப்பார்க்கையில் நான் சொல்ல நினைத்த உணர்வுகளில் வெகு குறைவாகவே காட்டியிருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் திரும்ப எழுத உட்கார்ந்து அந்த நினைவுச்சுழலில் மாட்ட விரும்பாத்தால் இப்படியே விட்டு விடுகிறேன்.]

Lun Hul 03, 02:35:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

நிலா
வருகைக்கு நன்றி,

சிபி,
நாமும் கலந்துகிட்டாச்சு.

Lun Hul 03, 02:36:00 PM GMT-4  
Blogger தம்பி said...

உற்சாகமா படிக்க ஆரம்பிச்சேன் கடைசில உருக்கமா ஆகிடுச்சி
அப்படியே கதையா மாத்தி இந்த மாத போட்டிக்கு அனுப்பிடுங்க சோழா

அன்புடன்
தம்பி

Lun Hul 03, 04:54:00 PM GMT-4  
Blogger வெற்றி said...

சோழநாடான்,
நல்ல கதை.

பி.கு:- உங்களை ஆறுப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Lun Hul 03, 09:05:00 PM GMT-4  
Blogger இளவஞ்சி said...

// கலந்துக்கும்படியிருக்கா(உங்க தலைப்புக்கு ஏற்றபடி இருக்கா) சொல்லுங்க, அனுப்புவோம் //

இப்படியெல்லாம் கேக்கப்படாது! :) ஒரு மரணத்தின் அருகாமையை அருமையா படம் புடிச்சிருக்கீங்க!

மடமடன்னு அனுப்பிவையுங்க...

Lun Hul 03, 10:34:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

தம்பி,

இது உண்மையாக நடந்தது. அதனால்தான் பின்குறிப்பில் "திரும்ப எழுத உட்கார்ந்து அந்த நினைவுச்சுழலில் மாட்ட விரும்பாத்தால் இப்படியே விட்டு விடுகிறேன்" என்று எழுதியிருந்தேன். அன்று அவனைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனதன் வலி வெகு காலம் இருந்தது. அதைவிட அவன் மரணிக்கும் போது என் கைகளில் தூக்கியிருந்தேன் என்ற நினைவு இன்னும் உள்ளது. எனவே இதை கதையாக அனுக இபோதைக்கு என்னாலாகாது. பல வருடங்கள் கழித்து வலியில்லா சாதாரன நிகழ்வாக என்னுள் மாறும் போது வேண்டுமானால் இது நடக்கலாம். அதனால் போட்டிக்கு அப்படியே அனுப்பிவிட்டேன்.

Miy Hul 05, 04:01:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

வெற்றி,
அழைப்பிற்கு நன்றி. கொஞ்சநாளாய் வேலை மென்னியைப் பிடிக்கிறது. இந்த வாரயிறுதியில் பதிவாயிட முயற்சி செய்கிறேன்.

Miy Hul 05, 04:01:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

இளவஞ்சி,
வரவுக்கு நன்றி. அனுப்பிவிட்டேன்.

Miy Hul 05, 04:01:00 PM GMT-4  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சோழநாடன்,
திரும்பி வரத் தாமதமாகிடுச்சு.. போட்டிக்கு ஏத்த ஆக்கம் தானுங்க.. சந்தேகம் வேறயா?:) அனுப்பின வரைக்கும் நல்லது..

இந்த நினைவுச் சுழல் பத்தி சொன்னது ரொம்பச் சரி.. ஒரு மரணத்தைக் அருகே பார்க்கிறதே ரொம்ப பயங்கரம் தான்.. அதிலும் கைலயே தூக்கி இருந்தது... இதுவே கனமாத் தாங்க இருக்கு..

காரணம் தெரிவிக்காமல் மரணமடைந்த நண்பன் ஒருவனின் நினைவு தினம் அடுத்த வாரம் வருது. அன்னிக்கு அரை மணி நேரம் அவனுடன் செலவிட்டிருந்தால் இன்று உயிரோட இருந்திருப்பானோன்னு இப்போவும் நினைச்சிக்குவோம்.... நானும் சுழலுக்குள்ள போக விரும்பலை. இதோட நிறுத்திக்கிறேன்.

Miy Hul 05, 06:31:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

பொன்ஸ்,
வருகைக்கு நன்றி.
உங்கள் நண்பருக்கும் என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Huw Hul 06, 01:22:00 AM GMT-4  
Blogger செந்தில் குமரன் said...

///
ஆனால் நான் வந்து சில நாழியில் "அதுவும்" திரும்பிவந்தது
///

படிக்கும் எனக்கே ஒரு மாதிரி இருக்கு நேரில் அனுபவித்த உங்களுக்கு அப்பா..... போட்டிக்கு வாழ்த்துக்க்கள்.

Biy Hul 07, 01:03:00 AM GMT-4  
Blogger சோழநாடன் said...

ஆமாங்க குமரன்(எண்ணம்),
கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்.

Biy Hul 07, 02:37:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home