Font Help?

Martes, Abril 11, 2006

7. துயிலெழும்புதல்

ஒரு வழியாய் தங்கை திருமணத்திற்கு ஊர் சென்று வந்து வேலையிலும் சேர்ந்து இயல்பு நிலைக்கு வந்தாகிவிட்டது. இடைக்காலத்தில் தமிழ்மணத்தில் நடந்திருக்கும் களேபரங்களை படித்து முடிக்கவே ஒரு வாரமாகி விட்டது, ஹ¤ம் அரசியல்தான் படு சூடாக போகிறது (மதம் வழக்கம் போலவே). தேர்தல் கணிப்புகளை எல்லாம் இப்போது தான் படித்து முடித்தேன். நம்ம ஆளுக வெகுசன ஊடகங்களை விட அருமையா கட்டுரை எல்லாம் போட்டு கலக்குறாங்கப்பா. வெறுமனே ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் படித்து காய்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக தெரிகிறது.
எங்கள் ஒரத்தநாடு தொகுதியில் அதே பழைய முகங்கள். திமுக வேட்பாளர் ராஜமாணிக்கம் (கோசி.மணியின் ஜால்ரா) அதிமுக சார்பில் அமைச்சர் வைத்தியலிங்கம் (மன்னார்குடி குடும்பத்துக்கு எடுபிடி). போன சட்டசபை தேர்தலின்போது எழுதியது மீண்டும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

(சிறு பகுதி மட்டும் இங்கே)
பரணில் கிடந்த
அரிதாரத்தை
மாட்டிக்கொண்டு அதே
பழைய முகங்கள்
புதிய துணைகளோடு
வாசல்களில்.
நான் ஓட்டுபோட போனா 49 ஓ வத்தான் கேக்கனும் போல. நல்ல சேதி என்னவென்றால் எல்.கணெசனுக்கு கிடைத்த ஆப்புதான். இப்ப பையனையும் நிற்க வைக்க முயன்றதாய் செய்தி வந்தது. மக்களே இவருக்கு தொகுதில ரொம்ப மக்கள் செல்வாக்கு இருக்குன்னுல்லாம் நினைக்க வேண்டாம். அவரு ஊரு கண்ணந்தங்குடியிலேயே ஒழுங்கா ஓட்டு கிடைக்காது. இவருகிட்ட என்ன பிரச்சனையின்னா தேர்தலுக்கு முன் ஊரில் உள்ள பெரிய தலைங்க வீட்டுல எல்லாம் பழியா கெடப்பாரு. முடிஞ்ச பின்னாடி யாரு போனாலும் திரும்பிகூட பாக்க மாட்டாரு. அதனால இவரு தனிப்பட்ட செல்வாக்குன்னு பாத்தா சில நூறுகள் தேறும்ன்னு நினைக்கிறேன்.

அப்புறம் இந்தியாவிலிருந்து திரும்பும் போது கொண்டுவந்த புத்தகங்களை இப்போது தான் படிக்க துவங்கியிருக்கிறேன். அள்ளிக்கொண்டு வருவதற்கு பெரிய பட்டியலோடு போனாலும் நேரமின்மை காரணமாக கொஞ்சமே கொண்டுவர முடிந்தது. அந்த புத்தகங்களைப் பற்றி ஆய்வுரையோ, விமர்சனமோ செய்யுமளவில் நானில்லையென்றாலும் ஒரு சதாரண வாசகனாய் என் வாசக அனுபவத்தை கொஞ்சம் சொல்லலாமென்றிருக்கின்றேன். "கடலோர கிராமத்தின் கதை"யை விமானத்திலேயே முடித்தாகி விட்டது. இதை கதை என்று சொல்வதை விட முகவுரையில் சொல்வதைப் போல இஸ்லாம் மக்களின் வாழ்க்கை குறித்தான ஒரு பதிவு என்று சொல்வதுதான் பொருத்தம். முஸ்லீம்களின் வாழ்க்கையை அப்படியே படமாக காட்டுகிறது. இந்த சமூகத்தில் முதலாளி பற்றிய பார்வை பழைய பண்ணையார்தனத்தை அப்படியே உள்வாங்கியிருந்தாலும், இயல்பாய் நடக்கும் விதவை திருமணத்தை குறித்தான பார்வை எனக்கு முற்றிலும் புதிய செய்தி. பொதுவாய் பெண்கள்மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும்(என்று நம்பப்படும்) சமுதாயத்தின் இவ்விதமான பார்வை குறித்து நான் இது வரை படித்தவிடங்களில் அதிகம் பார்த்ததில்லை.
இப்போது கி.ரா வின் கோபல்ல கிராமத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பொதுவாக புத்தகத்தை தொட்டால் முடிக்காமல் வைப்பதில்லை எனும் பழக்கத்தை மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக படிக்க முயற்சி செய்து வருகிறேன். பக்கம் பக்கமாய் ஓடாமல் நிதானமாய் அசைபோட்ட படி வரிகளோடு ஒன்றி படிப்பதும் கூட சில சமயம் நன்றாகத்தானிருக்கிறது. இரண்டு புத்தகத்தையும்(கோபல்ல கிராமம்&கோபல்லபுரத்து கிராம மக்கள்) முழுவதும் முடித்தபின்பு இதைப் பற்றி எழுத முடியும் என்று தோன்றினால் எழுதுகிறேன். இரு புத்தகங்களும் இருவேறு விதமான உணர்வைத்தருகிறது. தோப்பில் முகமது மீரான் மேடையிலமர்ந்தபடி அணுவணுவாக விவரிக்க தரையிலிருந்து அண்ணாந்து பார்த்தபடி ஆவென்று அமர்திருந்தேன். கி.ரா வோ மடியில் கிடத்தி தலைகோதியபடி கதைசொல்லும் அம்மாபோல/பாட்டிபோல சொல்லிக்கொண்டு செல்கிறார். ஒருவேளை முஸ்லீம் சமுதாயத்தின் வாழ்க்கைமுறை பற்றி அதிகம் தெரியாததாலும், கி.ரா சொல்லும் நிகழ்வுகள் பலவற்றை ஏற்கனவே என் கிராமத்தில் பார்த்திருப்பதாலும் இவ்விதம் தோன்றுகிறது போலும்.

1 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

கி.ராவின் நாவலில் வரும் ஒரு சம்பவத்தைத் தான் பாரதிராசா முதல்மரியாதையில் தந்தார். கள்வனின் காற்பெருவிரலைக் கடித்தபடி தண்ணீரில் மூழ்கிப்போகும் சம்பவத்தைச் சொல்கிறேன்.

கி.ராவின் எழுத்து நடை எனக்குப் பிடித்தமானது.

Biy Abr 14, 03:31:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home