Font Help?

Lunes, Pebrero 13, 2006

4. அன்புள்ள அப்பாவுக்கு

சில நேரங்களில்
ஏதோ ஒரு வெறுமை
மனம் முழுதும்
வியாபிக்கிறது.

யாருமற்ற ஓர்
பாலைவனமூடே
நான் மட்டும் தனியே
செல்வதைப் போல.

சுற்றிப் பார்த்தால்
மனிதர்கள்,
எங்கும் மனிதர்கள்
ஆனால் நெருங்க
முடியா இதயங்களுடன்.

எத்தனை பேர்
பழகினாலும்
இதயம் திறந்து
ஓர் வார்த்தை பேச
இயலவில்லை
எவருடனும்.

தொலைபேசி வழியே
கேட்கும் உங்கள்
குரல்கள் மட்டும்
பாலைவன நீரூற்றாய்

அவசர கதியில்
ஊர்வந்து திரும்பும்
ஒருசில நாட்களின்
நினைவுதான்
உயிர்நாடி எனக்கிங்கு.

காலில் சக்கரம்
கட்டியோடும்
அவசரங்களுக்கிடையே
இங்கே
நானும் ஒன்றாய்

இந்த வாழ்க்கைப் போரில்
எல்லோரும் எதிரிகள்
என்னைத் தவிர
எல்லோர் மனதிலும்
இதே எண்ணம்தான்.

எதைத் தேடி
இவையனைத்தும்.
எல்லாம் விற்று
எதனை
வாங்கப்போகின்றேன்?

கேள்விகள் ஆயிரம்
எழுந்தாலும்
திரும்பிப் பார்க்க
நேரம் இல்லை
மனமும் தான்.

எவ்வளவு தூரம்
எவ்வளவு நேரம்
தெரியவில்லை
ஒட வேண்டும்
என்பதைத் தவிர.

ஆயினும் நம்பிக்கை
இருக்கிறது
என்றாவது ஓர்நாள்
ஊர் திரும்புவேனென்று.
முடிந்துதான் வருவேனோ
என்ற பயத்தோடு.


கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்களுக்கு இங்கே பெரிய எதிர்ப்பணி உண்டென்பது தெரிந்தாலும், வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு என்ன பதிவதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக பழைய கவிதைகளைப் போட்டு இப்போதைக்கு ஒப்பேற்றுகின்றேன்.
இந்த இடுகையிலிருப்பது, முன்பு சென்னையில் வசிக்கையில் சிலமாதங்கள் வீட்டிற்கு(தஞ்சைக்கு) செல்ல முடியாத சமயமொன்றின் வாரயிறுதியில் மோட்டுவளையைப் பார்த்து படுத்திருந்த போது உருவானது.இதைப்பற்றி சிந்திக்கும் சிலசமயம் நான் படித்ததற்காக கூட வருத்தப்ட்டிருக்கிறேன். பொறியியல் படித்ததால்தான் அதற்க்கேற்ற வேலைதேடி ஆயிரமாண்டுகளாக என் மூதாதையர் வாழ்ந்த கிராமத்தை விட்டு வெளியேறி சென்னை வரவேண்டியதாடிற்று. [பிறகு அலுவல் காரணமாக நாட்டை விட்டே வெளியேறிவிட்டேன்]. கிராமத்திலிருக்கையில் அதைனை இழித்து பேசி வெளியே வந்ததும் புலம்பும் புலம்பலல்ல இது. அங்கிருந்த 19 வருடங்களும் அந்த ஊரை, அதன் அழகை, அதன் அழுக்கோடும் முரண்களோடும் சேர்த்தே நேசித்தேன். அவ்விதமான ஒன்று வலுவில் பிடுங்கப்பட்டதை, தெரிந்தே வழியின்றி கை நழுவவிட்டதை ஆற்றாமையோடு மனம் புலம்பியதன் வெளிப்பாடு இது. முடிந்தால் என் கிராமத்தைப் பற்றிய கதைகளையும் பின்பு இங்கு எழுதுகிறேன்.

1 Comments:

Blogger manasu said...

நன்றாய் இருந்தது சோழநாடன்.

பெரும்பாலான வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலை இது தான். புலி வால் பிடித்தது போல, , விடவும் முடியாமல் பிடிக்கவும் முழுமனது இல்லாமல்.....


///ஆயினும் நம்பிக்கை
இருக்கிறது
என்றாவது ஓர்நாள்
ஊர் திரும்புவேனென்று.
முடிந்துதான் வருவேனோ
என்ற பயத்தோடு.///

இந்த நம்பிக்கையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

Biy Peb 24, 02:03:00 AM GMT-5  

Mag-post ng isang Komento

<< Home