Font Help?

Martes, Enero 31, 2006

3. வாசகனின் வாக்குமூலம் - II.

சென்ற பதிவில் சொன்ன மொழிபெயர்ப்புகளுக்கு அடுத்ததாக மிகவும் விரும்பிப் படித்த புத்தகங்கள் சரித்திர கதைகள். சரித்திர கதைகளென்றால் பொன்னியின் செல்வன், சாண்டில்யன் கடல் புறா வகையிலானவைகள். இவ்வாசிப்பு சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட ராஜா, ராணி கதைகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. மேலும் இவ்வகைக் கதைகளை படித்தது பெரும்பாலும் அவை தரும் போதைக்காகவே. பொ.செ போல சில கதைகள் போதையையும் தாண்டி நல்ல அனுபவத்தைத் தந்தாலும், இவை ஓர் மொடாக்குடியன் திரும்பத் திரும்ப கள்ளுக்கடை தேடி ஓடுவது போல் மீண்டும் மீண்டும் தம்மையே சுற்ற வைப்பவை. அதனால் தான் சாண்டில்யனின் அனைத்து புத்தகங்களும் எங்கள் வீட்டு அலமாரியில் அமர்ந்திருக்கின்றன. வீட்டுக்கருகில் இருக்கும் வாடகை நூலகத்தில் கோவி.மணிசேகர் போன்றோரது பெரும்பாலான புத்தகங்களின் பின்னட்டையின் உள்புறத்தில் என்பெயரிருக்கும். ஒருவேளை இந்த போதையிலிருந்து மீண்டவர்களுக்கும், இதன் பக்கமே வராதவர்களுக்கும் அல்லது வெறுமனே எட்டிப்பார்த்து சென்றவர்களுக்கும் மேற்சொன்னவரிகள் மிகையாகத் தோன்றலாம். ஆனால் நான் 2 வருடங்கள் இந்த கனவுலகில் வாழ்ந்து பிறகே மெல்ல மீண்டுவந்தேன்.

அடிக்கடி என்னை நானே கேள்விக்குட்படுத்துவேன். அவ்வகையில் இவ்வித வாசிப்பு பழக்கங்களின் காரணம் ஆராய்கையில், முகத்திலறையும் நிதர்சனத்தின் சூடு பொறுக்காமல் ஓடுகிறேனோ எனத் தோன்றுவதுண்டு. ஆனால் இது மட்டுமே காரணமல்ல. பெரும்பாலும் நமக்கு தெரியாத சூழலை விவரிக்கையில் கேள்விகள் எழ வாய்ப்புகள் குறைவு. ஆனால் சமகால சூழலை பேசும் புத்தகங்கள் பலசமயங்களில் நம்முள் எழும்கேள்விகளை சமாளிக்காமல் தோற்றுவிழும். உள்ளே கேள்விகளை எழுப்புவது நல்ல புத்தகம்தான் என்றாலும்கூட ஏதோ ஒன்றை எழுப்பிவிட்டு பிறகு நேரதிர் திசையில் செல்பவற்றை முடிக்கும்போது குழப்பமும், வெறுப்புமே மிச்சமாகும். அதைவிட முக்கியமாக சின்ன வயதில் அப்பாவின் சேமிப்பிலிருந்து படித்த பிரபஞ்சன் கதைகளும் (அனைத்தையும் வீட்டிலிருக்கின்றன) மற்றும் பாலகுமாரனின் புதினங்கள் சிலவும் இந்த வகைகளை விட்டு ஓடவைத்தன

கதை வடிவங்களைப் பற்றி மட்டும் கதைத்துவிட்டு கவிதையை விடமுடியுமா. எல்லோரையும் போல் பதின்மத்தின் மத்தியில் நானும் கவிதைபால் காதல் கொண்டேன். ஆரம்ப காலத்தில் கண்டதை படித்தாலும் முதலில் அதிர்வினை உண்டாக்கியவர் கவிக்கோ "அப்துல் ரஹ்மான்". முதலில் கிடைத்த அவரது தொகுதி "பால்வீதி" படிக்கும்போது ஒன்றுமே புரியவில்லை. பிறகு அப்பாவின் துணையோடு கொஞ்சம் கொஞ்சமாய் படித்தேன். இன்னும் பால்வீதியில் புரிபடாத இடங்கள் உண்டு. ஆனால் மிகபிடித்தது "பித்தன்"தான். அவரது பித்தனை எத்தனைமுறை படித்திருப்பேன் என்றே தெரியவில்லை. நேர்களை ஆலாபனை செய்திருந்ததைவிட முரண்களின் உபாசகனாய் விசுவரூபம் எடுத்தார்.

"எம் குழந்தைகள்
புத்தகச் சுமை தாங்கமலேயே
பூப்பெய்திவிடுகிறார்கள்"
என்றெல்லாம் எழுதும் சிலருக்கு மத்தில்

"குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்...
குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
"
(நன்றி கணேஷ்)
என்றெல்லாம் எழுதும் பித்தன் ஒரு ஞானியாகவே தெரிந்தான். ஆனாலும் என் தனிப்பட்ட எண்ணம் விருது வாங்கிய ஆலாபனையை விட பித்தன் கொஞ்சம் உயரத்தில் உள்ளது போல் தோன்றியது.(இது ஆலாபனையை குறைத்து மதிப்பிட்டதால் அல்ல)
அதேபோல் மேத்தாவின் கவிதைகளில் சிலவும் பிடித்திருக்கின்றன. மேத்தாவைப் பற்றி ஏதும் தெரியாமல் படித்தபோது முதலில் புலம்பலே அதிகமாக தோன்றினாலும் மொத்ததில் கொஞ்சம் பிடித்திருந்தது. முதலில் படித்தது கண்ணீர் பூக்களா, முகத்துக்கு முகமாவென்று தெரியவில்லை.
வேறு சிலவும் படித்திருக்கிறேன் ஆனாலும் இப்போது நினைவில் இல்லை.

ஒருசில திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் கம்யூனிசக் கட்டுரைகள் தவிர அதிகம் படித்ததில்லை. காரணம் வீட்டில் இருந்த மற்றவை ஒப்பிலக்கியத் திறனாய்வுகள் சார்ந்தது.(பதின்ம வயதுகளில் இதெல்லாம் படிக்க கூடயதா?). இப்போது வலைப்பூக்களில் உலவத்தொடங்கிய பிறகு கட்டுரை வகைகளையும் கொஞ்சம் கூர்ந்தே படிக்கிறேன்.

அறிமுகப்பகுதி முதல் பதிவோடு நிறுத்தலாம் என்றிருந்தேன். ஆனால் வெறுமனே என்பெயர், வயது, ஊர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் பல்லாண்டுகளாய் என்னோடு உறவுகொண்ட என் தோழர்களைச் சொல்லி என் முகம்காட்ட நினைத்தேன். அதன் விளைவுதான் இந்த நீண்ட வாக்குமூலம். முதலில் மொழிபெயர்பு நூல்களைச் சொல்லும்போது புத்தகMIME க்கு வந்தது போல் விமர்சனம் வருமென்று நினைத்தாலும், அந்த விளையாட்டில் எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்திய நண்பர்களை நன்றியோடு நினைத்தே இவற்றையும் சொன்னேன். குறிப்பாக ருஷ்ய மொழி புதினங்களை யாராவது தேடினால் உபயோக படும் என்பதற்காகவே சொன்னேன். இன்னும் சொல்லாமல் விட்ட ருஷ்ய மொழி புத்தகங்களின் பெயரை சிறு அறிமுகத்தோடு பிறகு முடிந்தால் எழுதுகிறேன்.

எனவே தோழர்களே அறிமுகம் இத்தோடு முடிகிறது.. இனிமேல் எனது பதிவுகளை ஆரம்பிக்கின்றேன்,

[பின்குறிப்பு: அறிவுமதியின் புத்தகம் குறித்து தவறான தகவல் தந்த ஒரு வரியை நீக்கியிருக்கிறேன். சரியான தகவல் தந்த முத்துக்குமரனுக்கு நன்றி. ]