Font Help?

Huwebes, Enero 26, 2006

2. வாசகனின் வாக்குமூலம் - I.

    பொதுவாக நிகழ்காலத்தை, நாம் வாழும் இன்றைய சூழலை மையப்படுத்தி எழுதும் புதினங்கள் அவ்வளவாக என்னை ஈர்த்ததில்லை. மாறாக நான் பார்க்காத உலகத்தை, சமூகத்தை, அதன் மனிதர்களைக் காட்டும், அது தொடர்பான காட்சிகளை காட்டும் புத்தகங்களைத் தான் தேடி படித்திருக்கிறேன்.
அந்த வகையில் முதலில் வருவது மொழிபெயர்பு நூல்கள். அதுவும் 10-12 வயதுகளில் படித்த அப்பாவின் பெரிய ருஷ்ய மொழிபெயர்பு நாவல்களின் தொகுப்புக்கள் மிகுதியாக பாதித்தது (சிறுவயதில் படித்ததால் கூட இருக்கலாம்). அதில் பல புத்தகங்களின் பெயர் நினைவில் இல்லை, புத்தகங்களும் நிறைய காணாமல் போய் விட்டன. இன்னும் நினைவில்/வீட்டில் இருப்பவை சில மட்டுமே.

    மிக அற்புதமான சிறு புதினங்களின் (அ) சிறுகதைகளின் தொகுப்பு "வெள்ளரி நிலத்தில் பிள்ளைபேறு". இத் தொகுப்பில் எனக்குப் பிடித்தவை "நாற்பத்தி ஒன்றாவது மீன்கழிசல்" மற்றும் "வெள்ளரி நிலத்தில் பிள்ளைபேறு". முதலாவது அக்காலத்தைய ஒரு சண்டையையும் அங்கு உருவாகும் ஓர் காதலையும் சொல்லும்.(காம்ரேட்களின் புரட்சி காலமென்று நினைக்கிறேன்). "வெள்ளரி நிலத்தில் பிள்ளை பேறு"ம் அற்புதமான கதையாகும். வானொலி வழியே வேறு நகரத்தில் வாழும் மருத்துவர் தொலைதூரத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் தாதியின் துணையோடு பிரசவம் பார்க்கும் கதை (60 களில் எழுதப்பட்டது என நினைக்கின்றேன்). அந்த நேரத்தைய பதற்றங்களையும், உணர்வுகளையும் உணரும்படியிருக்கும். வேற்று மொழி இலக்கியங்களில், அதுவும் ருஷ்ய மொழியின்பால் ஆர்வமுடையோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினத் தொகுப்பு இது என்பேன். அதேபோல் "லெவ்ஷெய்னின்" "துப்பறியும் அதிகாரியின் கதை", "அலெக்ஸாண்டர் பூஷ்கின்" "தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்கள்", "அலெக்ஸாண்டர் குப்ரின்" "செம்மணி வயல்கள்", "மரியாபிரிலேயா" வின் "லெனின் வாழ்கை கதை" மற்றும் இன்னபிறவும் சோவியத் ருஷ்யாவின்பால் காதலேகொள்ள வைத்தன. ஒருவேளை இதுவே இவ்வகையினான மொழிபெயர்பின் பின்னுள்ள அரசியலாயிருக்கலாம்.

    அதேபோல் பிரசித்தி பெற்ற "ஸ்டாலின் கிராட்" சண்டையை வைத்து நிறைய புத்தகங்கள் வந்துள்ளது என்று நினைக்கின்றேன். நான் படித்தது/ படித்ததில் இன்னும் நினைவிலிருப்பது "பாலம்" மற்றும் "சகாப்த்தம் படைத்த ஸ்டாலின் கிராட்". இதில் பாலம் 6-7வது வகுப்புகளில் படிக்கும்போது பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்ததால் அதுகுறித்தான அதிக விவரங்கள் நினைவில்லை. "ஸ்டலின் கிராட்" யுத்ததைப் பற்றி அறிய விரும்பினால் 2001ல் வந்த "Enemy at the Gates" பார்க்கலாம். அந்த சண்டையை ஓரளவுக்கு விவரித்திருக்கும் நல்ல படம். நான் படித்த சில புத்தகங்களில் பொதுமக்களின் பங்களிப்பை பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தது. படத்தில் பெரிய குறை பொதுமக்களின் பங்களிப்பை அதிகம் காட்டாதது. ஆனாலும் சொல்ல வந்ததை அருமையாக சொல்லியிருக்கும் படம்.

    பிறகு சில மலையாள, ஹிந்தி, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய கதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன்(மொழிபெயர்ப்புதான்). ஆனால் வெகுநாட்களுக்கு முன் படித்ததால் கதை நினைவிருக்கிறதே ஒழிய விவரங்கள் நினைவில்லை.

    மொழிபெயர்பு நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டது "சேகுவாரா - வாழ்வும், மரணமும்" புத்தகத்தில் தான். எனக்குப் பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் வைக்க மாட்டேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் தாண்ட பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதாகி விட்டது. ஜோர்ஜ்-ஜி-காஸ்டநாடா எழுதியதை பாலச்சந்தர் என்பவர் மொழிபெயர்திருந்தார். ஏதோ ஒரு கருமாந்திரம் பிடித்த இஸத்தின் வழியில் எழுதியுள்ளார்(என்று நினைக்கின்றேன்). மிக மிக எரிச்சலூட்டும் நடை. மொழிபெயர்பே அன்னிய மொழியில் அனைவராலும் படிக்க முடியாது என்பதால் தாய்மொழியில் படிக்கக் கொடுப்பதாகும். ஆனால் மொழிபெயர்புக்கே இன்னொரு மொழிபெயர்பு தேவையென்றால் என்ன செய்வது. முன்பெல்லாம் மொழிபெயர்புகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்கியவன் இந்த புத்தகம் படித்த பிறகு இப்போதெல்லாம் பிரித்து கொஞ்சம் படித்துவிட்டே வாங்குகிறேன்.

    நேரடி தமிழ்ப் புதினம் என்றாலும் மலேசியாவில் வெளிவந்த "சண்முகம்" அவர்களின் "சயாம் மரண ரயில்" எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். இது குறித்து பேச நிறைய உள்ளதால் இதைப்பற்றி பிறகு ஓர் தனிப்பதிவே போடுகின்றேன்.

2 Comments:

Blogger சந்திப்பு said...

தங்களிடம் ஏராளமான இலக்கிய ஆளுமை இருப்பதாக தெரிகிறது. வெளிக் கொண்டு வாருங்கள்! தமிழர்கள் தொலைத்து விட்டது நல்ல இலக்கியத்தைதான். சிறு, சிறு அறிமுகத்தோடு சில நாவல்களை நீங்கள் அறிமுகப்படுத்தினால் தமிழ்மணக்கும். புதிய இலக்கிய ஆர்வலர்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. எனக்கும் இலக்கியத்திற்கும் ரொம்ப தூரம். இருப்பினும் யாராவது சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், குறிப்பாக மொழி நடை நன்றாக இருந்தால் நிச்சயம் வாசிப்பேன். அந்த வகையில் சமீபத்தில் -இனிய உதயத்தில்- வெளியான ஏழை படும் பாடு படித்தேன்! இலக்கியம் என்றால், நாவல் என்றால் அப்படி படைக்க வேண்டும். காலத்திற்கும் அழியாத - இன்றைய உலகிலும் செல்லுபடியாகக்கூடிய - உணர்வுகளை தூண்டக்கூடிய - ஏழ்மையின் கொடிய நிறத்தை - சமூகத்தின் அவலத்தை தோலுரித்து காட்டியுள்ளார் விக்டர் யூகோ.

Biy Ene 27, 01:40:00 AM GMT-5  
Blogger சோழநாடன் said...

சந்திப்பு, புதிய அறிமுகத்திற்கும் நன்றி. நான் வகைதொகை தெரியாது படித்ததையன்றி வேறெதும் எழுதிப் பழக்கமில்லை. இதை எழுதும்போது Book Mime க்கு கிடைத்த விமர்சனம் போல் வந்துவிடுமோவென்ற ஐயப்பாட்டிலேயேத்தான் எழுதினேன். நேர்மறையாகக் கொண்டதற்கு நன்றி. இதனை இந்த வாரயிறுதியிலும் தொடர்கிறேன்.

Biy Ene 27, 03:54:00 AM GMT-5  

Mag-post ng isang Komento

<< Home